சிறப்புடையது

உலக வரலாற்றில் நீங்காத ரத்தக் கறைகள்:முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.


வரலாற்றின் பக்கங்கள் வெற்றிகளால் மட்டுமல்ல, அநீதியால் சிந்தப்பட்ட ரத்தத்தாலும் எழுதப்பட்டவை. அப்படி ஒரு தீராத ரத்தக் கறையாக உலக வரலாற்றில் உறைந்து கிடக்கிறது முள்ளிவாய்க்கால். தன் இனத்திற்காகவும், மொழிக்காகவும் நின்ற மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த அந்தப் பேரிடர், "இந்த உலகில் மனிதநேயம் மாண்டுவிட்டதா?" என்ற கேள்வியை இன்றளவும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. 

   Aஇனப்படுகொலையின் ஆணிவேர்: இலங்கை குடியுரிமை சட்டம் ஓர் பார்வை!
      பதினெட்டாம் நூற்றாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தேயிலை மற்றும் காபி கொட்டைகள் முக்கிய பங்கு வகித்தன.
மேலும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான "மலையகத் தமிழர்கள்"அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சிந்திய ரத்தத்தில்தான் இலங்கையின் 
பொருளாதாரம் தழைத்தது! ஆனால், 1948-ல் இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் கொண்டு வரப்பட்ட 'இலங்கை குடியுரிமைச் சட்டம்' (Ceylon Citizenship Act) ஒரு மாபெரும் துரோகத்தைச் செய்தது.
1. தமிழின உரிமை பறிப்பு;
      இலங்கை குடியுரிமைச் சட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்டது. அவர்கள் 'நாடற்றவர்கள்' (Stateless) என அறிவிக்கப்பட்டனர்.
2. தனிமைப்படுத்தப்பட்ட தமிழர்கள்;
             இதன் மூலம் தமிழர்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.இதனால்
நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பெருமளவு குறைந்தது. ஒரு இனத்தை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த அரசு கையாண்ட முதல் ஆயுதம் இதுவே.
3. மொழிப்போர்:
            1956-ல் 'சிங்களம் மட்டும்' சட்டம் கொண்டு வரப்பட்டபோது, தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.
4.  தீக்கிரையான ஆசியாவின் மிகப்பெரிய நூலகம்: யாழ் நூலகம்
           1981-ல் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான "யாழ் நூலகம்" எரிக்கப்பட்டது. 97,000 புத்தகங்களோடு சேர்த்து ஒரு இனத்தின் வரலாறும், மருத்துவமும், அறிவும் தீக்கிரையாக்கப்பட்டது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் நூலகத்தை அழி" என்ற நாசிசக் கொள்கை அங்கே அரங்கேறியது.

B. சிறையாக மாறிய சிங்களம்: தமிழின மீதான அடக்குமுறை
       1983 ஜூலை மாதம் தமிழர்கள் வாழ்வில் வாழ்வா! சாவா! என்ற போராட்டத்தை ஏற்படுத்தியது.
கொழும்பு வீதிகளில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். கார் மற்றும் பேருந்துகளில் இருந்த தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
 1. சிறைச்சாலை படுகொலை:
         இலங்கையின் வெலிக்கடை 
சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

          1A. தளபதி குட்டிமணி;
      "என் கண்களைத் தானம் செய்யுங்கள், மலரப்போகும் ஈழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்! "

தளபதி குட்டிமணி அவர்களின் கண்களைத் தோண்டி எறிந்த வன்மம், அந்த ஆட்சியாளர்களின் இனவெறியைப் பறைசாற்றியது. இந்த நிகழ்வே லட்சக்கணக்கான தமிழர்களை உலகெங்கும் அகதிகளாகப் புலம்பெயரச் செய்தது.

C. பாதுகாப்பு வளையங்களில் மரணப் பொறிகள்
      2009-ஆம் ஆண்டு போர் அதன் இறுதி
அத்தியாயத்தை எட்டியது. இலங்கையின் ஆக்கிரமிப்பால் வன்னிப் பெருநிலத்தில் மக்கள் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து இறுதியில் "முள்ளிவாய்க்கால்" என்ற குறுகிய கடற்கரை மணலில் முடக்கப்பட்டனர். பாதுகாப்பு வளையத்திற்கு வாருங்கள் என்று
அரசாங்கமே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துவிட்டு தஞ்சம் புகுந்தவர்களை சரமாரியாகக் கொன்றது.
          C1செஞ்சோலைத் துயரம்:
2006-ல் முதலுதவிப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த 61 பள்ளி மாணவிகள் விமானத் தாக்குதலில் உடல் சிதறி மடிந்தனர். அவர்கள் அணிந்திருந்த பள்ளிச் சீருடைகள் ரத்தத்தில் நனைந்திருந்த காட்சி உலகையே உலுக்கியது.

D. முள்ளிவாய்க்கால் - சாட்சிகளற்ற போர்.
         2009 மே மாதத்தின் இறுதி நாட்கள் நவீன மனித வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்.
1. பட்டினிச் சாவுகள்:
      உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் கொண்டு செல்வது முடக்கப்பட்டது.ஒரு பிடி கஞ்சிக்காக வரிசையில் நின்ற மக்கள் மீதும் எறிகணைகள் ஏவப்பட்டன.
2. மருத்துவமனைத் தாக்குதல்:
      (Image Source Wikimedia Commons )    காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த தற்காலிக மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மயக்க மருந்து இன்றி காயங்களை ஆற்றும் அவலம் அங்கே நிலவியது.
3. வெள்ளை கொடியில் ரத்த கரை
       சர்வதேச உத்தரவாதத்தை நம்பி வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த அரசியல் பிரிவுத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது போர்க்குற்றத்தின் உச்சகட்டமாகும்.

E. சர்வதேசத்தின் மௌனமும் துரோகமும்;
       முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் கணக்கானோர் கொன்று குவிக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் அங்கிருந்து வெளியேறியது ஒரு 'வரலாற்றுத் துரோகம்' என்று பின்னாளில் விமர்சிக்கப்பட்டது. வல்லரசு நாடுகளின் அரசியல் நலன்களுக்காக ஒரு இனம் பலிகடா ஆக்கப்பட்டது. தற்பொழுது இந்த இனப்படுகொலை நிறைவடைந்து 17 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் நீதிக்கான கோரிக்கைகள் காகிதங்களாகவே கிடக்கின்றன.

F. இன்றும் தொடரும் கட்டமைப்பு சார் இன அழிப்பு:
        துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருக்கலாம், ஆனால் தமிழர்கள் மீதான தாக்குதல் வேறு வடிவத்தில் தொடர்கிறது.
1. நில அபகரிப்பு: 
     தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ராணுவமயமாக்கப்படுகின்றன.
2. அடையாள அழிப்பு:
     பழமையான தமிழ் கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் புத்த விகாரைகள் எழுப்பப்படுகின்றன.
3. காணாமல் ஆக்கப்பட்டோர்:
      ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளைத் தேடி, முதிய தாய்மார்கள் இன்றும் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைக்காமலேயே பல தாய்மார்கள் மறைந்து வருவது வேதனையான நிதர்சனம்.

முடிவுரை:
        முள்ளிவாய்க்கால் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் அல்ல! அது தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும்
போராடிய பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கிய கல்லறைகள் ஆகும். ஒரு நாடு தன் மக்களின் மீது
தொடுக்கும் ஒருதலைப்பட்ச முடிவு
அநியாயத்தின் உச்சம் ஆகும்.இலங்கை உலக அரங்கில் இருந்து தப்பிக்கலாம்
வரலாற்றிற்கு நிச்சயம் பதில் சொல்லி ஆக வேண்டும்.

வாசகர் களம்
உலகில் ஒரு பகுதியில் போர் நடந்தால் துடிக்கும் சர்வதேச நாடுகள், ஈழ மண்ணில் ஒரு இனமே அழிக்கப்பட்டபோது மட்டும் 'உள்நாட்டுப் பிரச்சினை' என்று ஒதுங்கிக் கொண்டது ஏன்?
    (உங்கள் கருத்து)




           

கருத்துகள்