6 மாத தடை இனி 12 மாதம்! ரஷ்யாவின் முதுகெலும்பை உடைக்கிறதா ஐரோப்பிய ஒன்றியம்?

           Ukraine Recovery Conference
     (Image Credit: © European Union, 2026)

உக்ரைன் போரை ஒட்டி ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளை (Sanctions), 6 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக (1 வருடம்) நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிரடி முடிவு எடுத்துள்ளது. இந்த ஒரு பொருளாதார வியூகம் ரஷ்யாவை எப்படி பாதிக்கும்? இதோ சுருக்கமான அலசல்:

 A.   6 மாத தடை 12 மாதங்களாக மாறுவது ஏன்....?



    1. ஐரோப்பிய ஒன்றியத்தின் 20-வது தடைத் தொகுப்பு (20th Sanctions Package)
    ரஷ்யா மீதான தடை நீடிப்பின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியம் 20-வது தடைத் தொகுப்பை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், கள்ளத்தனமாக கச்சா எண்ணெய் கடத்தும் ரஷ்யாவின் 'நிழல் கப்பற்படை' (Shadow Fleet) மற்றும் ரஷ்ய ராணுவத்திற்குத் தொழில்நுட்ப உதவி செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  2. அமெரிக்காவின் நிபந்தனை:
     உக்ரைனுக்கு $50 பில்லியன் டாலர் கடன் வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ள நிலையில் ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தடைகள் நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்க வேண்டும்! என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

3.ஹங்கேரியின் முட்டுக்கட்டை:
      வழக்கமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நீட்டிக்கப்படும் இந்தத் தடைகள், தற்போது ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவுடன் இணக்கமான நல்லுறவைக் கொண்டுள்ள ஹங்கேரி, தனது 'வீட்டோ' (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போடுவதைத் தவிர்க்கவே ஐரோப்பிய ஒன்றியம் இந்த உத்தியைக் கையாண்டுள்ளது.

4.​ போலந்து உக்ரைன் மீட்பு மாநாடு (Gdańsk Conference)
போரினால் சிதைந்த உக்ரைனின் நகரங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளை மீண்டும் எப்படிக் கட்டியெழுப்புவது என்பது குறித்து விவாதிக்க போலந்தின் Gdańsk நகரில் இந்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், உக்ரைனின் மறுசீரமைப்பிற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

B. ரஷ்யாவின் முதுகெலும்பு உடையுமா?

1.     ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்கள் முடக்கம்.
       ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய மத்திய வங்கி முதலீடு செய்துள்ள சுமார் $200 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள், ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி நடவடிக்கை நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிற்குப் பெரும் பொருளாதாரச் சவாலாக அமையும் என்று புவிசார் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2.    ரஷ்யாவின் 'போர் நிதிக்கு பேராபத்து': ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி செக்..!
     ரஷ்யாவின் முதன்மை வருவாய்  ஆதாரங்களான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் வைரங்கள் மீதான தடைகள் தொடர்ந்து நீடிப்பதால், அந்நாட்டின் போருக்கான நிதி ஆதாரம் (War Chest) கடுமையாகப் பாதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் (EU) உறுதியாக நம்புகிறது.

3.  தொழில்நுட்பத் தட்டுப்பாடு
     ராணுவ ஏவுகணைகளின் மூளையாகச் செயல்படும் மைக்ரோசிப்கள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யாவின் அதிநவீன ஆயுத உற்பத்தித் திறன் முடங்கி, அந்நாட்டின் ராணுவ பலம் நீண்டகால அடிப்படையில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என புவிசார் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

C. ரஷ்யாவின் மாற்று வியூகம் என்ன?
        1. ஆதரவு அளிக்கும் ஆசிய சந்தைகள்...!
       ஐரோப்பா புறக்கணித்த கச்சா எண்ணெயை இந்தியா, சீனா போன்ற நாடுகள் தள்ளுபடி விலையில் வாங்குவது ரஷ்யாவிற்கு பெரிய நிதியுதவியாக உள்ளது.
 
     2.  மறைமுக வர்த்தகம்: 
    ரஷ்யாவிற்கான முக்கியப் போக்குவரத்து மையங்களாகத் (Transit Hubs) துருக்கி மற்றும் மத்திய ஆசிய நாடுகள் செயல்படுகின்றன. இவற்றின் வழியாக ரஷ்யாவிற்குள் மறைமுக வணிகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி மேற்கத்தியப் பொருட்கள் ரகசியமாக ரஷ்யாவிற்குள் கொண்டு சேர்க்கப்படுவதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளின் வீரியம் பெருமளவில் குறைகிறது.

முடிவுரை:
       ​இந்த 12 மாத கால நீட்டிப்பு ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு கடுமையான நெருக்கடியைத் தரும் என்பது உண்மைதான். ஆனால், சீனா மற்றும் இந்திய உள்ளிட்ட ஆசிய நாடுகளின் மறைமுக வர்த்தக ஆதரவு இருக்கும் வரை, ரஷ்யாவின் முதுகெலும்பை முழுமையாக உடைப்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அத்தனை எளிதானதாக இருக்காது என்பதே தற்போதைய புவிசார் அரசியல் நிலவரம்.

Tags.#ரஷ்யா உக்ரைன் போர், #ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா தடை, #Russia EU Sanctions International Politics Tamil #Geopolitics Tamil.#ஐரோப்பிய ஒன்றியத்தின் 20-வது தடைத் தொகுப்பு (20th Sanctions Package)
#Shadow Fleet எனப்படும் ரஷ்யாவின் நிழல் கப்பற்படை.

                                     @puvisaararasiyal. Com

கருத்துரையிடுக

புதியது பழையவை