21-ஆம் நூற்றாண்டின் உலக வல்லரசு யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாக தற்பொழுது சிலிக்கான் செமிகண்டக்டர்கள் (Microchips) உருவெடுத்துள்ளன.
ஸ்மார்ட்போன் முதல் சாட்டிலைட் வரை அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குவது இந்த சிலிகான் சிப்கள் மட்டுமே.
தற்போது இந்த சிலிக்கான் போரில் சிம்மாசனத்தைக் கைப்பற்ற உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் சீனாவும் களமிறங்கியுள்ளன.
ஒரு பக்கம் அமெரிக்காவின் 'CHIPS and Science Act', மறுபக்கம் சீனாவின் 'தொழில்நுட்பத் தற்சார்பு' (Self-Reliance) என உலக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
A. அமெரிக்காவின் வியூகம்: CHIPS Act & 'கழுத்தை நெரிக்கும்' தடைகள் (Chokepoint Strategy)
உலக அளவில் அமெரிக்கா
என்னதான் சிப் வடிவமைப்பிலும் (Chip Design) மென்பொருட்களிலும் முன்னணியில் இருந்தாலும், உற்பத்தி திறன் என்று வரும் பொழுது தைவான் (TSMC), தென் கொரியா (Samsung) போன்ற ஆசிய நாடுகளையே 80%-க்கும் மேல் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
இதனால் ஏற்படும் புவிசார் அரசியல் அபாயத்தைக் குறைக்க அமெரிக்கா இரண்டு முக்கிய உத்திகளைக் கையாண்டது:
1. உள்நாட்டு உற்பத்திக்கு $52 பில்லியன் ஊக்கத்தொகை (CHIPS Act):
அமெரிக்காவில் சிப் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அதற்காக கூடுதல் ஆலைகளை அமைப்பதற்கான
பல பில்லியன் டாலர் நிதியுதவி Intel, TSMC, Samsung, Micron போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது அமெரிக்க அரசு.!
இதன் மூலம் அதிநவீன சிப் உற்பத்தியை மீண்டும் அமெரிக்க மண்ணிற்குள் கொண்டுவருவதே இதன் முக்கிய இலக்கு.
2. விநியோகச் சங்கிலி துண்டிப்பு:
Nvidia, AMD போன்ற அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் AI பிராசஸர்கள் சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவது தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த செயல்பாட்டை நன்கு உற்று நோக்கினால் இது வெறும் வர்த்தக மோதலாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பப் பனிப்போர் (Tech Cold War) என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
3. இயந்திரத் தடை (ASML EUV):
நெதர்லாந்தின் ASML நிறுவனம், 3 நானோமீட்டர் மற்றும் 2 நானோமீட்டர் அளவிலான மிகச் சிறிய சிப்களை உருவாக்கத் தேவையான அதிநவீன EUV (Extreme Ultraviolet) லித்தோகிராபி இயந்திரங்களைச் சீனாவிற்கு விற்பனை செய்வதை மேற்கத்திய
நாடுகள் தடுத்து நிறுத்தியுள்ளன.
4. கூட்டணிகள் (Chip 4 Alliance):
சீனாவை தனிமைப்படுத்தும் நோக்கில் தற்பொழுது அமெரிக்காவுடன்
ஜப்பான், தென் கொரியா, தைவான்
போன்ற நாடுகள் சிப் 4 கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
B. சீனாவின் வியூகம்: ‘பிக் ஃபண்ட்’ மற்றும் மரபுவழி சிப் ஆதிக்கம்;
அமெரிக்காவின் இந்த தடைகள் ஒரு பக்கம் சீனாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் சீனா தனது உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கான வாய்ப்பாக அமையும்.
1. பில்லியன் டாலர் அரசு நிதி (The Big Fund);
சீன அரசு தனது 'National Integrated Circuit Industry Investment Fund' (Big Fund) மூலம் ஒதுக்கப்பட்ட $150 பில்லியனுக்கும் அதிகமான நிதியை உள்நாட்டு சிப் ஆராய்ச்சி மற்றும் தொழிற்சாலைகளுக்கு சீனா அள்ளி இறைத்துள்ளது.
2. தற்சார்பு மற்றும் மாற்று தொழில்நுட்பங்கள் ;
சீனாவின் முன்னணி நிறுவனங்களான SMIC மற்றும் Huawei
போன்ற நிறுவனங்கள் மேற்கத்திய மென்பொருட்கள் மற்றும் இறக்குமதி பாகங்கள் இல்லாத புதிய உற்பத்தி கட்டமைப்பை தற்பொழுது உருவாக்கி வருகின்றன.
மேற்கத்திய நாடுகளின் அதிநவீன EUV இயந்திரங்கள் இல்லாமலேயே DUV தொழில்நுட்பத்தை மாற்றி அமைத்து மேம்பட்ட சிப் தயாரிப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3. மரபுவழி சிப்களில் (Legacy Chips) பிடி:
கார்கள், மருத்துவ உபகரணங்கள், ட்ரோன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றிற்கு தேவையான அடிப்படை சிப்கள் உற்பத்தியில் சீனா உலகளவில் மூன்றில் ஒரு பங்கைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
C. இந்த யுத்தத்தில் ஜெயிக்கப்போவது யார்?
இந்த மோதலில் "யார் வெற்றி பெறுவார்?" என்பதற்கான விடை ஒரே வரியில் அடங்காதது; அது கால அளவைப் பொறுத்தது:
1.குறுகிய காலத்தில் (அடுத்த 3-5 ஆண்டுகள்) – அமெரிக்காவின் கை ஓங்கும்:
அதிநவீன சிப்கள் (3nm, 2nm) மற்றும் AI தொழில்நுட்பத்தில் அமெரிக்கா தனது கூட்டணிகள் (TSMC, ASML, Nvidia) பலத்துடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும்.
இதன் விளைவால் சீனாவின் AI வளர்ச்சி மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் மேம்பாட்டை இந்தத் தடைகள் ஓரளவு தாமதப்படுத்தும்.
2. நீண்ட காலத்தில் (2030-க்குப் பிறகு) – சீனாவின் மீள்தன்மை (Resilience):
ஒரு நாட்டின் மீது தொழில்நுட்ப தடை போன்ற அதிகப்பட்ச அழுத்தம் கொடுக்கும் பொழுது அது அவர்களைச் சொந்தக் காலில் நிற்கவே தூண்டும்.
அமெரிக்காவுக்கே ஆப்பு:
கார் மற்றும் இயந்திரங்களுக்குத் தேவையான சாதாரண சிப்களின் (Legacy Chips) தயாரிப்பைச் சீனா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால், சிப்களுக்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் சீனாவிடம் கையேந்தும் நிலை வரும்.
தடைகள் உடையும்: சிப் தயாரிக்கும் இயந்திரங்களைச் சீனா சொந்தமாகவே உருவாக்கிவிட்டால், அமெரிக்காவின் தடைகள் செல்லாக்காசு ஆகிவிடும்.
முடிவுரை;
சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வெறும் வர்த்தக மோதல் அல்ல; இது நாளைய உலக அதிகாரத்தைத் தீர்மானிக்கப் போகும் 21-ம் நூற்றாண்டின் 'தொழில்நுட்பப் பனிப்போர்' (Tech Cold War). இந்த டிஜிட்டல் சதுரங்கத்தில் யாருடைய கை ஓங்குகிறதோ, அவர்களே எதிர்கால உலகை ஆள்வார்கள்!