Photo Credit: U.S. Navy / DVIDS (Public Domain)
மத்திய கிழக்கில் தற்பொழுது நிலவி வரும் ராணுவ மோதல்கள் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில்
ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC- Office of Foreign Assets Control) உள்கட்டமைப்பு மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில் முதல் கட்ட நடவடிக்கையாக "அமெரிக்கக் கம்பெனிகள் யாரும் ஈரானிடம் எண்ணெய் வாங்கவோ, வர்த்தகம் செய்யவோ கூடாது." என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து தற்பொழுது "அமெரிக்கா மட்டுமில்லாமல், உலகத்தில் உள்ள வேறு எந்த நாட்டின் கம்பெனியும் ஈரானிடம் எண்ணெய் வாங்கக் கூடாது. மீறி வாங்கினால், அந்த வெளிநாட்டுக் கம்பெனிக்கு அமெரிக்க வங்கிகள் கடன் தராது, மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழில் செய்ய முடியாது, டாலரில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது." என அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதனைப் பற்றி ஒரு முழு அலசலை இந்த கட்டுரையில் பார்க்கலாம்!
A. பொருளாதாரத் தடையின் முக்கிய இலக்குகள்!
1. 'நிழல் கப்பற்படை' (Shadow Fleet) மீதான பிடி:
ஈரான் தனது கச்சா எண்ணெயை விற்க பயன்படுத்திய மிக முக்கிய வழிகளான ரகசியக் கப்பல்கள் (Dark Fleet/Shadow Fleet), போலி ஆவணங்கள் மூலம் இயங்கும் சர்வதேச ஷிப்பிங் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடும் பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஈரானிய கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை மறைக்கும் ஜிபிஎஸ்-ஐ ஏமாற்றும் 'சிக்னல் ஸ்பூஃபிங்' முறையை கையாளுவதால் இந்த மறைமுக போக்குவரத்தை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக உள்ளது.
மேலும் நடுக்கடலில் நடைபெறும் ரகசிய எண்ணெய் இடமாற்றங்களை (Ship-to-Ship Transfers) கண்காணித்து
முடக்குவது இதன் பிரதான நோக்கமாக உள்ளது.
2. நிழல் வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை வலையமைப்பு:
சர்வதேச உலக வங்கி அமைப்பான SWIFT அமைப்பிலிருந்து
நவம்பர் 5, 2018 அன்று ஈரான் அதிகாரப்பூர்வமாக துண்டிக்கப்பட்டது.
ஈரான் பணப் பரிமாற்றத்திற்காக உபயோகப்படுத்தப்படும் போலி காகித நிறுவனங்களைத் (Shell Companies) தொடங்கி ரகசிய ‘நிழல் வங்கி’ வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் சீனா போன்ற நாடுகள் செலுத்தும் எண்ணெய் பணத்தை இந்தப் போலி நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்து ஈரானுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உள்ளூர் கரன்சியாக மாற்றுகிறது.
ஆனால் தற்பொழுது இந்த போலி நிறுவனங்களையும் அவற்றின் வங்கி கணக்குகளையும் முடக்கும் முயற்சியில்
அமெரிக்கா களமிறங்கி உள்ளது.
3. பெட்ரோ கெமிக்கல் மற்றும் ஆற்றல் துறை:
கச்சா எண்ணெய் தடை இருந்த போதிலும் ஈரான் தன் மாற்று வருமானத்திற்காக கச்சா எண்ணெயில் இருந்து பெறக்கூடிய உப பொருட்களான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், உரங்கள் மற்றும் எல்பிஜி (சமையல் எரிவாயு) போன்ற 'பெட்ரோ கெமிக்கல்' உபபொருட்களை உலக சந்தையில் விற்கத் தொடங்கியது.
ஆனால் அமெரிக்கா இப்போது இந்த மாற்றுப் பொருட்கள் மீதும் 'இரண்டாம் நிலைத் தடை' (Secondary Sanctions) விதித்துள்ளது.
இதனால் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமல்லாமல் இந்தியா, சீனா அல்லது ஐரோப்பாவைச் சேர்ந்த எந்தவொரு வெளிநாட்டுத் தனியார் நிறுவனமும் ஈரானிடம் இருந்து இந்த பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கினாலோ அல்லது அவற்றைக் கப்பலில் ஏற்றிச் சென்றாலோ, அந்த வெளிநாட்டு நிறுவனங்களையும் அமெரிக்கா தனது கறுப்புப் பட்டியலில் சேர்த்துவிடும்.
அவ்வாறு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் டாலரை பயன்படுத்தி சர்வதேச அளவில் பண பரிமாற்றம் செய்வது முற்றிலும் தடுக்கப்படும்.
இதன் மூலம் ஈரானின் நண்பர்களை எதிரியாக்கும் முயற்சியில் தற்பொழுது அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
B. உலக வர்த்தகத்தில் இதன் தாக்கம்!
1. சீனாவின் கொள்முதல் சமன்பாடு:
ஈரானிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயின் பெரும் பகுதியை சீனா வாங்கி வருகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனச் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை!
2. கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம்:
பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையில் கூடுதல் புவிசார் அரசியல் பிரீமியத்தை (Risk Premium) சேர்க்கின்றன.
3. மாற்றுப் பொருளாதார வழிமுறைகள்:
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் ஈரான் போன்ற நாடுகளை BRICS+ கூட்டமைப்பின் உள்ளூர் நாணய வர்த்தகம் மற்றும் டாலர் அல்லாத மாற்று நிதி வழிகளை நோக்கி நகர ஊக்குவிக்கின்றன.
முடிவுரை
அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த மோதல் என்பது வெறும் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் மோதல் மட்டுமல்ல; அது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிதி அமைப்புகளை நேரடியாக ஆட்டிப்படைக்கும் ஒரு பிரம்மாண்ட புவிசார் பொருளாதாரப் போர். நிழல் கப்பற்படைகள் மீதான கண்காணிப்பு மற்றும் போலி வங்கிக் கணக்குகள் மீதான தடைகள் மூலம் ஈரானை அமெரிக்கா எவ்வளவுதான் நெருக்குதலுக்கு உள்ளாக்கினாலும், மாற்று வழிகள் மூலமான கள்ளச்சந்தை வர்த்தகமும், அதனால் உலகச் சந்தையில் எகிறும் ‘ரிஸ்க் பிரீமியம்’ விலையேற்றமும் தவிர்க்க முடியாததாகவே நீடிக்கிறது. இறுதியில், வல்லரசுகளின் இந்த அதிகாரப் போட்டியும் பொருளாதாரத் தடைகளும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, உலகெங்கிலும் உள்ள சாமானிய மக்களின் அன்றாட பணவீக்கத்திலேயே வந்து முடிகின்றன.