அமெரிக்காவிற்கு செக் வைக்கும் 'எல்லைகளற்ற நட்பு': உலகை மாற்றியமைக்கும் ரஷ்யா-சீனா கூட்டணி!

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகம் ஒற்றை துருவ ஆதிக்கத்தை (Unipolar World) நோக்கி
பயணித்தது. அமெரிக்கா தன்னை உலகளாவிய வல்லரசாக நிலை நிறுத்திக் கொண்டது. ஆனால், இருபத்தியோராம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில், குறிப்பாக 2026-ஆம் ஆண்டில், சர்வதேச அரசியல் களம் மிக வேகமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.இந்த மாற்றத்தின் முக்கிய மூலமாக விளங்குவது ரஷ்யா மற்றும் சீனா இடையேயான "புதிய மூலோபாயக் கூட்டணி" (Comprehensive Strategic Partnership of Coordination for a New Era) ஆகும்.
2026 மே மாதத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பெய்ஜிங்கிற்கு 
மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க
25-வது அரசுமுறைப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை ஒரு புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.இது இரு நாடுகளுக்கு இடையேயான வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல; மாறாக, மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் ஒரு புதிய உலக ஒழுங்கிற்கான (Multipolar World Order) அடித்தளமாகும்.

A.வரலாற்றுப் பின்னணி: மோதலிலிருந்து ஒருங்கிணைப்பு வரை
        சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன்(ரஷ்யா) இடையேயான உறவு எப்போதும் சீராக இருந்ததில்லை. 1960-களில் கம்யூனிச சித்தாந்த ரீதியாகவும், எல்லைப் பிரச்சினைகள் காரணமாகவும் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் (Sino-Soviet Split) நிலவின.
ஆனால் தற்பொழுது இந்த நிலை முற்றிலும் மாறுபட்டது. இரு நாடுகளும் தங்களின் கடந்த கால கசப்புகளைக் கடந்து, ஒருங்கிணையத் தொடங்கின.
      1. 1996: முதல் மூலோபாய கூட்டணி
         இரு நாடுகளுக்கும் இடையே முதல் மூலோபாய கூட்டணி (Strategic Partnership) உருவானது. இது 2026-ஆம் ஆண்டோடு வெற்றிகரமாக 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
       2. 2001; மாஸ்கோ ஒப்பந்தம்
            2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரால் மாஸ்கோவில் இது கையெழுத்தானது.
இரு நாடுகளின் மூலோபாயக் கூட்டுறவு தொடங்கி 30 ஆண்டுகளும் நிறைவடைகிறது.இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக ராணுவக் கூட்டணி இல்லாத (Non-alliance), நேருக்கு நேர் மோதிக்கொள்ளாத (Non-confrontation), மற்றும் எந்தவொரு மூன்றாவது நாட்டையும் இலக்கு வைக்காத (Not targeting any third party) பரஸ்பர நல்லுறவை வளர்ப்பதே குறிக்கோளாகக் கொண்டது. மேலும்
2026 மே பெய்ஜிங் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது.
3புதிய யுகத்தின் கூட்டணி: கடந்த பத்தாண்டுகளில், அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அதிபர் விளாடிமிர் புடின் ஆகிய இரு தலைவர்களின் தனிப்பட்ட நட்புறவு மற்றும் 40-க்கும் மேற்பட்ட சந்திப்புகள் மூலம், இந்த உறவு "எல்லைகளற்ற நட்பு" (NoLimits Friendship) என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

B. கூட்டணிக்கான முக்கியப் பின்னணிக் காரணிகள் (Driving Forces)
       1. பொதுவான புவிசார் அரசியல் எதிரி (Shared Geopolitical Rivalry):
 ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுமே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (NATO) மற்றும் குவாட் (QUAD) போன்ற மேற்கத்திய இராணுவ, அரசியல் கூட்டமைப்புகளைத் தங்களின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. மேலும் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீதும் தைவான் மற்றும் தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனா மீதும் அமெரிக்கா செலுத்தும் அழுத்தங்கள் இரு நாடுகளையும் ஒன்றிணையத் தூண்டின.
2. பொருளாதாரப் பரஸ்பரத் தேவை:
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் (Sanctions), ரஷ்யாவை மாற்றுச் சந்தையை நோக்கி நகரக் கட்டாயப்படுத்தின.சீனா உலகளாவிய உற்பத்தி மையமாகவும், ஆற்றல் தேவை (Energy-hungry nation) அதிகம் உள்ள நாடாகவும் திகழ்கிறது. மறுபுறம், ரஷ்யா உலகின் மிகப்பெரிய எரிசக்தி (கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு) ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த இருதரப்புத் தேவையும் இரு நாடுகளையும் பிரிக்க முடியாத பொருளாதாரப் பங்காளிகளாக மாற்றியுள்ளது.

C.2026 பெய்ஜிங் மாநாடும் முக்கிய ஒப்பந்தங்களும்;
      2026 மே 19-20 தேதிகளில் நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளும் இணைந்து 20-க்கும் மேற்பட்ட முக்கிய மூலோபாய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. சீன அதிபரின் 15-வது ஐந்தாண்டுத் திட்டமும் (2026-2030), ரஷ்யாவின் 2030 மேம்பாட்டுத் திட்டமும் ஒன்றிணைக்கப்பட்டு, பின்வரும் துறைகளில் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
1.ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு (Energy & Infrastructure):
 சைபீரியாவில் இருந்து சீனாவிற்கு
இயற்கை எரிவாயுவை வழங்கும் குழாய்த்திட்டங்கள் (Power of Siberia) விரிவாக்கப்பட்டு வருகின்றன. டாலர் ஆதிக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான எரிசக்தி வர்த்தகம் முழுவதும் யுவான் (Yuan) மற்றும் ரூபிள் (Ruble) நாணயங்களிலேயே தற்பொழுது தடையின்றி நடைபெறுகிறது.
2.உயர் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி (High-Tech & Aerospace):
     செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி ஆய்வு, கூட்டு செயற்கைக்கோள் ஏவுதல், செமிகண்டக்டர் தொழில்நுட்பம் மற்றும் மருந்துப் பொருட்கள் (Pharmaceuticals) தயாரிப்பில் இரு நாடுகளும் கூட்டுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளன. மேற்கத்திய தொழில்நுட்பச் சந்தையைச் சாராமல் இருக்க 'தொழில்நுட்ப இறையாண்மையை' (Technological Sovereignty) அடைவதே இதன் நோக்கமாகும்.
3. கல்வி மற்றும் மக்கள் தொடர்பு (Years of Education 2026-2027):
இந்த உறவு தலைமுறைகளைக் கடந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக, 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளை "ரஷ்யா-சீனா கல்வி பரிமாற்ற ஆண்டுகள்" என இரு தலைவர்களும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கூட்டு ஆராய்ச்சி மற்றும் மாணவர் பரிமாற்றங்கள் அதிகரிக்கப்படும்.

D.புதிய உலக ஒழுங்கை உருவாக்குதல்: BRICS மற்றும் SCO-வின் பங்கு    
மேற்கத்திய நாடுகளின் G7 கூட்டமைப்பிற்குப் போட்டியாக, BRICS மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஆகியவற்றை ரஷ்யாவும் சீனாவும் வலுப்படுத்தி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் (UNSC) நிரந்தர உறுப்பினர்களாக உள்ள இரு நாடுகளும், மேற்கத்திய நாடுகளின் ஒருதலைப்பட்சமான தடைகளையும் இராணுவத் தலையீடுகளையும் வீட்டோ (Vito) அதிகாரம் மூலம் தொடர்ந்து முறியடித்து வருகின்றன. "உலகளாவிய தெற்கு" (Global South) என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளைத் தங்களின் பக்கம் ஈர்க்கும் ராஜதந்திரத்தில் இரு நாடுகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

    முடிவுரை: எதிர்கால உலக அரசியல்
​ரஷ்யா - சீனா மூலோபாயக் கூட்டணி என்பது தற்காலிகமான ஒரு அரசியல் நகர்வு அல்ல; அது நீண்ட காலத் திட்டமிடப்பட்ட ஒரு உலகளாவிய மாற்றம். இரு நாடுகளும் தங்களின் இறையாண்மை, எல்லை ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு அரசியல் அமைப்புகளைப் பரஸ்பரம் மதித்து, ஒரு புதிய வகை "வல்லரசு உறவுக்கு" (New Type of Major-Country Relations) உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்வதாக அறிவித்துள்ளன.
​சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த இரு நாடுகளின் அச்சு (Axis), மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் இராணுவ ஆதிக்கத்திற்கு ஒரு வலுவான முற்றுப்புள்ளியாக அமையக்கூடும். அமெரிக்கா தலைமையிலான ஒற்றை துருவ உலகம் மறைந்து, பல அதிகார மையங்களைக் கொண்ட பன்முகத் துருவ உலகமே (Multipolar World) இருபத்தியோராம் நூற்றாண்டின் எதிர்காலம் என்பதை இந்த ரஷ்யா-சீனா கூட்டணி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை