எழுதியவர்: சுரேஷ் கண்ணா.D
சிலிக்கான் போர்: உலகை ஆட்டும் ஒற்றைப் பேரரசு!
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் தொழில் புரட்சியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவது 'சிலிக்கான் சிப்' (Silicon Chip) ஆகும். உலகின் இரு பெரிய வல்லரசுகளான சீனா மற்றும் அமெரிக்கா வெறும் 1.6 நானோமீட்டர் அளவுள்ள 'சிலிக்கான் சிப்' தொழில்நுட்பத்திற்காக மல்லுக்கட்டிக்கொண்டிருப்பது, உலகளாவிய அளவில் இந்த சிப்களின் தாக்கத்தை நமக்குத் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் பின்னணியில் இருப்பது வெறும் நில ஆதிக்கம் மட்டுமல்ல; உலகத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் 'TSMC' எனும் ஒரே ஒரு கார்ப்பரேட் பேரரசுதான்.
A. உலகை ஆளும் அந்த ஒரு 'சிப்' (The Semiconductor Monopoly)
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், மின்சார வாகனங்கள் தொடங்கி அதிநவீன ஏவுகணைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வரை அனைத்திற்கும் இந்த சிலிக்கான் சிப்கள்தான் மூளை. உலகிற்குத் தேவைப்படும் 90%-க்கும் அதிகமான அதிநவீன சிப்களை தைவானின் 'TSMC' நிறுவனம் ஒன்றுமட்டுமே தயாரிக்கிறது. இந்த ஒற்றை ஆதிக்கம்தான் தைவான் தீவை உலக வல்லரசுகளின் போர்க்களமாக மாற்றியிருக்கிறது.
B. யார் இந்த TSMC?
1987-இல் மோரிஸ் சாங் என்பவரால் தைவானில் தொடங்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனம் இது. இவர்கள் சொந்தமாகச் சிப்களை வடிவமைப்பதில்லை; மாறாக, ஆப்பிள், என்விடியா போன்ற உலக நிறுவனங்கள் தரும் டிசைனை அப்படியே அதிநவீன சிப்களாக உற்பத்தி செய்து தரும் ஒரு பிரம்மாண்ட "ஒப்பந்த தொழிற்சாலை" (Foundry) ஆகும்.
C. சீனாவின் ஆதிக்கமும் அமெரிக்காவின் அச்சமும்..!
உலகத் தொழில்நுட்பத்தின் ஆணிவேர் தைவானிடமும், அதை இயக்கும் TSMC நிறுவனத்திடமும் இருக்கிறது. ஒருவேளை சீனா தனது ராணுவ பலத்தால் தைவானைக் கைப்பற்றும் பட்சத்தில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், இன்டெல் ஆகியவற்றிற்குத் தேவையான சிப்கள் மற்றும் ஏவுகணை தயாரிக்கத் தேவைப்படும் சிப்களின் விநியோகம் முற்றிலும் முடங்கிவிடும் என அமெரிக்கா அஞ்சுகிறது. இதன் உச்சகட்டமாக, சமீபத்தில் (ஜூலை 2026 நிலவரப்படி) OpenAI நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திற்கு 5% பங்குகளை வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் உலக ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்கா நேரடியாகத் தன் கட்டுப்பாட்டில் வைக்கத் துடிக்கிறது
Meta-வின் புதிய AI திட்டம்! சரிந்த சிப் பங்குகள் & உலகப் பொருளாதார நிலவரம் | Bloomberg The Pulse 2026
D. தன்னிறைவை நோக்கி நகருமா அமெரிக்கா? என்ன செய்யப்போகிறது 'CHIPS Act'?
தைவான் மீதான சார்பைக் குறைத்து, சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க அமெரிக்கா கொண்டு வந்த மாஸ்டர் பிளான்தான் இந்த 'CHIPS Act'. இதற்காக 52 பில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ள அமெரிக்கா, தைவானின் 'TSMC' நிறுவனத்தை தனது அரிசோனா மாகாணத்தில் தொழிற்சாலை அமைக்க வைத்துள்ளது. உலகத் தொழில்நுட்பத்தின் சாவி எப்போதும் தன் கைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா போடும் மிகப்பெரிய பகடைக்காய் இது!
E. முடிவுரை: உலகை ஆளப்போவது எது?
ஒரு காலத்தில் உலக நாடுகள் கச்சா எண்ணெய்க்காகவும் (Crude Oil), நில ஆதிக்கத்திற்காகவும் யுத்த களம் கண்டன. ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலகை ஆளப்போவது எல்லையோ, ராணுவ பலமோ அல்ல; வெறும் 1.6 நானோமீட்டர் அளவுள்ள சிலிக்கான் சிப்கள்தான் என்பதை இந்த 'சிப் போர்' (Chip War) நமக்கு உணர்த்துகிறது. இந்த வல்லரசுகளின் பந்தயத்தில் தொழில்நுட்பச் சாவியைக் கைப்பற்றப் போவது அமெரிக்காவா அல்லது சீனாவா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.