இனி ஐரோப்பாவில் பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்க முடியாதா? 29 நாடுகளை உலுக்கும் எல்லை சவால்!

   
      Image sourced by  multimedia center for 
                      European parliament 
  இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) மிக முக்கிய வரலாற்று சாதனையாகப் பார்க்கப்படுவது 'ஷெங்கன் மண்டலம்' (Schengen Area) ஆகும்
       
     இந்த அமைப்பு, உள்நாட்டு எல்லைச் சோதனைகள் ஏதுமின்றி மனிதர்களும் வணிகமும் தடையின்றி இயங்குவதை உறுதி செய்தது!

   ஆனால் தற்பொழுது நிலவரம் மிகவும் தலைகீழாக மாறி உள்ளது.வரலாற்றுப் பாதையில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை இவ்வமைப்பு சந்தித்து வருகிறது.

 புவிசார் அரசியல் பதற்றங்கள், கட்டுப்பாடற்ற குடியேற்ற அலைகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக, பல்வேறு உறுப்பு நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன.

A  ஷெங்கன் ஒப்பந்தத்தின் பின்னணி மற்றும் சட்ட விதிகள்;
Image sourced by multimedia center for 
                      European parliament 

       இந்த ஒப்பந்தம் 1985-இல் தொடங்கப்பட்டு 1995-இல் நடைமுறைக்கு வந்தது.

   இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய கண்டத்திற்குள் பாஸ்போர்ட் மற்றும் எல்லைச் சோதனைகள் இல்லாத அமைப்பை உருவாக்கியது.

     தற்போது 29 நாடுகளை உள்ளடக்கிய இந்த மண்டலத்தில்,  சுமார் 35 லட்சம் மனிதர்கள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்காக எவ்விதத் தடையுமின்றி எல்லைகளைக் கடந்து வருகின்றனர்.

     ஷெங்கன் சட்டத்தின் பிரிவு 25a-இன் படி, பொது அமைதிக்கோ அல்லது தேசிய பாதுகாப்பிற்கோ கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், உறுப்பு நாடுகள் தற்காலிகமாக உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த சட்டப்பூர்வ இடமுண்டு. 

இந்த விதியை ஆயுதமாகப் பயன்படுத்தியே தற்போது பல நாடுகள் எல்லைச் சோதனைகளை மீண்டும் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

B    எல்லை நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள்:

         

      வட ஆப்பிரிக்கக் கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதிகளான சென்டா (Ceuta) மற்றும் மெலிலா (Melilla) ஆகியவை, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்கக் குடியேறிகள் ஐரோப்பாவிற்குள் நுழையும் முதன்மை வாயில்களாகத் திகழ்கின்றன.

     சமீபத்தில், வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் எல்லையிலிருந்து கடல் வழியாகவும் கரை வழியாகவும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கக் குடியேறிகள் ஒரே நேரத்தில் சென்டாவிற்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது ஸ்பெயின் அதிகாரிகளை திணறடித்ததுடன், அவர்கள் மூலமாக 'இரண்டாம் கட்ட நகர்வாக' பிற ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறிகள் புகுந்து விடுவார்கள் என்ற அச்சத்தை ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  
     இதனுடன் சேர்ந்து மத்திய கிழக்கில் போர்களால் இடம்பெயர்ந்த மக்களின் தொடர் வருகை, மனித கடத்தல் நெட்வொர்க்குகளின் செயல்பாடுகள் மற்றும் தீவிரவாத அச்சம் ஆகியவை நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

     மேலும், பின்லாந்து மற்றும் போலந்து எல்லைகள் வழியாக சட்டவிரோதக் குடியேறிகளைச் செயற்கையாகத் தூண்டிவிட்டு ஐரோப்பாவின் அமைதியை ரஷ்யா சீர்குலைப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

C.   எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவந்துள்ள நாடுகள்:
       இதன் ஒரு கட்டமாக தற்போது ஜெர்மனி தன் அண்டை நாடுகளோடு பகிர்ந்து கொள்ளும் ஒன்பது நில எல்லைகளான ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

     இதற்கு ஜெர்மனி தரப்பில், அகதிகள் மையங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றும் கட்டுப்பாடற்ற குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

   இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் தனது நாட்டின் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பைக் காரணம் காட்டி பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி எல்லைகளில் தீவிர சோதனை மேற்கொள்கிறது.

  இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாடு பால்கன் பாதை வழியிலான சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனித கடத்தலைத் தடுக்க ஹங்கேரி, ஸ்லோவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா எல்லைகளைத் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

   மேலும் இத்தாலி தனது ஸ்லோவேனியா எல்லையிலும், டென்மார்க் தனது ஜெர்மனி எல்லையிலும் சோதனைகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

    இவை தவிர போலந்து, நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் குறிப்பிட்ட எல்லைகளில் சோதனைகளை நடத்தி வருகின்றன.

D.  புதிய டிஜிட்டல் பாதுகாப்புக் கட்டமைப்புகள்:
    ஷெங்கன் மண்டலத்தின் வெளி எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் இரு புதிய டிஜிட்டல் அமைப்புகளை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. 

D1. நுழையும் மற்றும் வெளியேறும் முறைமை (Entry/Exit System - EES) 
        இந்தத் தொழில்நுட்பம் மூலம்  EU அல்லாத நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நுழைவதையும் வெளியேறுவதையும் தானியங்கி கேட் மூலம் விரல்ரேகை மற்றும் முக அடையாளப் படம் போன்ற பயோமெட்ரிக் தரவுகளாகப் பதிவு செய்கிறது.

     இதன் மூலம் 90 நாட்கள் சுற்றுலா விசா எடுத்துவிட்டு, காலக்கெடுவை மீறி திருட்டுத்தனமாகத் தங்குபவர்களின் விவரங்களை உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

D2     ETIAS (European Travel Information and Authorization System) 
         இந்த அமைப்பின் மூலம், விசா விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ஐரோப்பாவிற்குப் புறப்படும் முன்பே, இணையம் வழியாகப் பாதுகாப்பு முன்-அனுமதியைப் (Travel Authorization) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

E.  பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்கள்:
       இந்த எல்லைச் சோதனைகள் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதால், சரக்குப் போக்குவரத்து பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

  இதனால் ஐரோப்பிய வர்த்தகத் துறைக்கும், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களுக்கும் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் கூடுதல் செலவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது..

E1  அரசியல் தாக்கங்கள்:
      கட்டுப்பாடற்ற குடியேற்றத்தைக் காரணம் காட்டி பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள
தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் இக்கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்ட ரீதியாகவும் மனிதநேய அடிப்படையிலும் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் நாடுகளுக்கு உள்ளது. ஆனால், இதனால் ஏற்படும் நிதிச் சுமை மற்றும் கலாச்சார மோதல்கள் காரணமாகவே நாடுகள் தற்போது அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றன.

முடிவுரை
​ஐரோப்பாவின் எல்லைக் கட்டுப்பாடுகள் 'தற்காலிகமானவை' என்று ஐரோப்பிய ஆணையம் அறிவித்திருந்தாலும், நடைமுறையில் அவை நிரந்தர அம்சமாக மாறிவருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

 திறந்த எல்லைகள் என்ற ஷெங்கனின் முதன்மைக் கோட்பாட்டிற்கும், உறுப்பு நாடுகளின் தேசியப் பாதுகாப்புத் தேவைகளுக்கும் இடையிலான இந்த முரண்பாடுதான் தற்போதைய ஐரோப்பிய அரசியலின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

வாசகர் களம்
உங்கள் கருத்து என்ன?"
"தேசிய பாதுகாப்பிற்காக எல்லைகளை மூடுவது சரியா? அல்லது மனிதநேய அடிப்படையில் அகதிகளை ஏற்றுக்கொள்வதுதான் சரியான தீர்வா? உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவிடுங்கள்!
  

கருத்துரையிடுக

புதியது பழையவை