இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலங்களில் ஐரோப்பிய கண்டம் கண்டிராத மிகப்பெரிய ராணுவ மோதல் என்றால் அது ரஷ்யா - உக்ரைன் போர் ஆகும்.
முழுமையான போராக 2022-ல் தொடங்கி தற்பொழுது வரை தொடரும் இந்த மோதல், வெறும் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையோரப் போராக மட்டும் நிற்காமல், உலகளாவிய வல்லரசுகளின் அதிகாரப் போட்டியாகவும், சர்வதேச பொருளாதாரத்தை தீர்மானிக்கும் காரணியாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா உண்மையிலேயே நேட்டோவால் சுற்றி வளைக்கப்படுகிறதா? இந்த மோதலின் பின்னால் உள்ள நிஜமான அரசியல் காரணங்கள் என்ன....?
A. "கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்" – உடைந்த வாக்குறுதி?
1990 பிப்ரவரியில் ஜெர்மனி மீண்டும் இணைக்கப்படுவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் பேக்கர் (James Baker), சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிடம் (Mikhail Gorbachev)
வாக்குறுதி ஒன்றை அளித்தார்,
"நேட்டோவின் அதிகார வரம்பு கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட நகராது" ("not one inch eastward")
என அவர் கூறியது வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
B. நேட்டோவை எதிர்கொள்ள சோவியத் போட்ட 'வார்சா' கணக்கு!
அமெரிக்காவின் நேட்டோ கூட்டணிக்கு பதிலடியாக சோவியத் யூனியனால் தொடங்கப்பட்ட ஒரு ராணுவ கூட்டணி வார்சா ஒப்பந்தம்' (Warsaw Pact) ஆகும்.
1. நேட்டோவின் எழுச்சியும் சோவியத் யூனியனின் பதற்றமும்:
சரியாக 1955-இல் ஜெர்மனி 'நேட்டோ' (NATO) உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இது சோவியத் யூனியனுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்தது.
இதற்கெதிராக மே 14, 1955 அன்று போலந்தின் தலைநகர் வார்சாவில், சோவியத் யூனியன் தனது தோழமை நாடுகளான கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா மற்றும் அல்பேனியா ஆகியவற்றுடன் இணைந்து 'வார்சா ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சோவியத் யூனியன் இரண்டு சிக்ஸர்களை அடித்தது.
ஒன்று ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்பு அரணாக பயன்படுத்திக் கொண்டது
மற்றொன்று உறுப்பு நாடுகளின் இராணுவப் படைகள் சோவியத் யூனியனின் தலைமை தளபதி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
C. சோவியத் வீழ்ச்சியும் நேட்டோவின் அலை அலையான விரிவாக்கமும் (1991–2004)
சரியாக 1991-இல் உள்பூசல் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக சோவியத் யூனியன் முடிவுக்கு வந்தது.
மேலும் வார்சா ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.
ஆனால் அமெரிக்கா தலைமையிலான
'நேட்டோ' கூட்டணி கலைக்கப்படவில்லை.
மாறாக நேட்டோ பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தின் பெயரைக் கொண்டு
கிழக்கு நோக்கி தன் எல்லையை விரிவாக்கத் தொடங்கியது.
இதன் மூலம் வார்சா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகிய நாடுகள் 1999-இல் தங்களை அதிகாரப்பூர்வமாக நேட்டோவில் இணைத்துக் கொண்டது.
அதைத் தொடர்ந்து 2004-இல் பல்கேரியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்தன.
மேலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடுகளான எஸ்டோனியா, லேட்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகள் நேட்டோவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, 2008 புக்கரெஸ்ட் (Bucharest) உச்சிமாநாட்டில் உக்ரைன் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளும் எதிர்காலத்தில் நேட்டோவில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது ரஷ்யாவை பெரும் பதற்றத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
D. உக்ரைன் ஏன் இவ்வளவு முக்கியம்?
(Image sourced by Wikipedia commons )
ரஷ்யாவின் பாதுகாப்பு வரைபடத்தில்
உக்ரைன் முக்கிய அங்கம் வகிக்கிறது.
ஐரோப்பாவில் இருந்து ரஷ்யாவை தாக்க நினைக்கும் எந்தவொரு படைக்கும் உக்ரைன் ஒரு மதில் சுவராக இருந்துள்ளது.
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், மாஸ்கோ நகருக்கு மிக அருகில் நேட்டோவின் ஏவுகணைகள் வந்துவிடும். இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு சவாலாக அமையும்.
ரஷ்யாவின் பெரும்பகுதி கடல் நீரால் சூழப்பட்டாலும் அவை பனிக்கட்டிகளாகவே உள்ளன . எனவே வர்த்தகம் செய்ய வெதுவெதுப்பான கடல் நீர் தேவை என்பதால்
சரியாக 2014 அன்று உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.
இதன் மூலம் கிரிமியா தீபகற்பத்தில் அமைந்துள்ள செவஸ்டோபோல் துறைமுகம் முற்றிலும் ரஷ்யாவின் முழுமையான இராணுவ மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
இருப்பினும் ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் (UN) அங்கீகரிக்கவில்லை.
E. போருக்கான உடனடித் தூண்டுகோல்: 2014 'மைதான்' புரட்சி
2013 இறுதியில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்யவிருந்த நிலையில், அன்றைய ரஷ்ய ஆதரவு அதிபர் விக்டர் யானுகோவிச் அதை திடீரெனக் கைவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உக்ரைன் மக்கள் தலைநகர் கீவ்வின் 'மைதான்' (Maidan) சதுக்கத்தில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது கலவரத்தை தீவிர படுத்தியது.
2014 பிப்ரவரியில் தீவிரமடைந்த இந்த 'மைதான் புரட்சி' அதிபர் யானுகோவிச்சின் ஆட்சியை வீழ்த்தியது. உக்ரைனில் மேலைநாட்டு ஆதரவு அரசு அமைந்ததுடன், நேட்டோவில் இணைவது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட இலக்காகவும் மாற்றப்பட்டது.
தன் வாசற்படிக்கே நேட்டோ வருவதையும், உக்ரைன் தன் பிடியிலிருந்து நழுவுவதையும் கண்ட ரஷ்யா, 2014-லேயே கிரிமியாவைக் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியே 2022-இல் வெடித்த முழு அளவிலான போர்.
முடிவுரை: அதிகாரப் போட்டியும் உலக ஒழுங்கும்
ரஷ்யா - உக்ரைன் போர் என்பது வெறும் இரு எல்லைகளுக்கு இடையே நடைபெறும் சண்டை அல்ல; அது வல்லரசுகளின் புவிசார் அரசியல் (Geopolitics) சதுரங்க ஆட்டம்!
ஒரு நாட்டின் இறையாண்மையை மீறி ரஷ்யா போர் தொடுத்ததை நியாயப்படுத்த முடியாது என்றாலும், தன் எல்லைக்கே நேட்டோவை விரிவாக்கிய மேலைநாடுகளின் நகர்வுகளும் இந்தப் பதற்றத்திற்குக் முக்கியக் காரணம்.
வல்லரசுகளின் இந்த அதிகாரப் போட்டியில், இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களின் உயிர்களும் உலகப் பொருளாதாரமுமே!
வாசகர் களம்
ஒரு நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் முக்கியமா? அல்லது மற்றொரு நாட்டின் சுதந்திரமும் இறையாண்மையும் முக்கியமா? நேட்டோவின் இந்த விரிவாக்கம் நியாயமானதுதானா... உங்கள் கருத்து என்ன?"